அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே நிறவெறி பாகுபாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஜாகோப் பிளேக் என்ற 29 ஆப்பிரிக்க அமெரிக்கரை அவரது மூன்று மகன்கள் முன்னிலையிலேயே ஏழு முறை கெனோஷா காவல் துறையினர் சுட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஜாகோப் பிளேக் சுடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் பேஸ்புக் பக்கம் ஒன்றில் இனவெறி வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் போடப்பட்டன.
அதைத்தொடர்ந்து 17 வயதான வெள்ளை இன அமெரிக்க சிறுவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போராட்டகாரர்கள் மத்தியில் சென்றார். அப்போது, அந்த சிறுவன் சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார். பயனாளர்கள் புகாரளித்தும் அந்தப் பக்கத்தை பேஸ்புக் முடக்கத் தவறியதே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், "அந்தக் குறிப்பிட்ட பக்கத்தை நீக்காமல் இருந்தது எங்கள் தவறுதான். இது செயல்பாட்டு தவறுதான். ஆரம்பக்கட்ட புகார்களை பரிசீலனை செய்த ஒப்பந்தக்காரர்கள் சரியான முடிவை எடுக்கவில்லை" என்றார்.
இருப்பினும், அந்தப் பக்கத்தில் வெளியான பதிவைக் கண்டுதான் சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், செயல்பாட்டு தவறுகளை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கமலா அதிபராக தகுதியற்றவர்' - ட்ரம்ப் தாக்கு