முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் யூ டியூப் சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ வன்முறையைத் தூண்டும் (policy violation) வகையில் இருந்ததால் அதனை நீக்குவதாக யூ டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவின் தகவல்களை பகிர யூ டியூப் மறுத்துவிட்டது. மேலும், வன்முறை ஏற்படுவதைத் தடுக்க ட்ரம்ப்பின் சேனலில் கமெண்ட் செய்யும் ஆப்சன் முற்றிலுமாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் சேனலில் அடுத்த ஏழு நாள்களுக்கு புதிய வீடியோக்களை அப்லோடு செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து யூடியூப் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கவனமாக மதிப்பாய்வு செய்த பின், வன்முறைக்கான தற்போதைய சாத்தியங்கள் அடிப்படையில், Donald J. Trump சேனலில் பதிவேற்றப்பட்ட புதிய உள்ளடக்கத்தை அகற்றி, வன்முறையைத் தூண்டும் விதமாக எங்கள் கொள்கைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ஜோ பைடன் பதிவியேற்பு விழாவின்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை சூறையாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பின்னணியில் ட்ரம்ப் இருப்பதாக ஏழுந்த புகாரையடுத்து, அவரது சமூக வலைதள கணக்குகளை முடக்க நிறுவனங்கள் முடிவு செய்தன. பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் என நிறுவனங்கள் வரிசையாக அவரது கணக்கை முடக்கிய நிலையில், யூ டியூப் நிறுவனமும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது.