கரோனா தொற்று காரணமாக முன்னதாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக நியூசிலாந்தில் கரோனா பரவல் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
இதன் விளைவாக, கடந்த 17 நாள்களில் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், இதுவரை ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் படிப்படியாகப் பூரண குணமடைந்து வீடு திரும்பிவந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம், தற்போதைக்கு நியூசிலாந்து கரோனா இல்லாத நாடாக உருவெடுத்துள்ளது. இந்தச் செய்தியை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜெசிந்தா, "தற்போதைக்கு நியூசிலாந்தில் கரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்திவிட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையடுத்து, விரைவில் அங்குள்ள விளையாட்டு திடல்களைத் திறப்பதற்கும், பாட்டுக் கச்சேரிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்