கரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் மூலம் கரோனா வைரசிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து, பல நாடுகளில் கரோனா மருத்துவச் சிகிச்சைக்கு அம்மருந்தை உபயோகித்தனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா வைரசிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளைக் கடந்த ஒன்றரை வாரங்களாக உட்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின், சுகாதார அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்கனவே இரண்டு நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக காப்பீடு பெறப்பட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்துவது மூலம் கரோனா குணமாகும் என்பது உறுதியாகவில்லை.
பல நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கைகள் விடுத்துள்ளனர். பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் உள்ள காரணத்தினால் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி வெளியே மருந்தகங்களில் அம்மருந்தை வாங்கி பயன்படுத்தக் கூடாது" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுகாதார அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப முன்னணி மருத்தவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக, 17 நாடுகளில் உள்ள 3 ஆயிரம் கரோனா நோயாளிகள் அழைத்துவரப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதைப் பார்க்க முடிகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'மலேரியாவுக்கான மருந்தை எடுத்து வருகிறேன்' - ட்ரம்ப்