சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கரோனா வைரஸ் (தீநுண்மி), தற்போது 190-க்கும் அதிகமான நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
2019 டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த நோய்க் காரணமாக இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தீநுண்மியைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு, பயணத் தடை அமலில் உள்ளதால் ஏராளமான தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது.
வரலாறு காணாத இந்த இக்கட்டான சூழலில், கரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு விளம்பரம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஐநா அறக்கட்டளை, இல்யூமினேஷன் என்ற பிரபல அனிமேஷன் பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் உலக சுகாதார அமைப்பு கைகோத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பேசுகையில், "இந்தச் சவாலான நேரத்தில் மக்களுக்கு அறிவுரை கூறுவதுடன், நம்பிக்கையையும் அளிப்பது அவசியம்.
தகுந்த இடைவெளி, இணையம் மூலம் இணைந்திருப்பது, கருணையுடன் கரோனாவைக் கடப்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு இல்யூமினேஷன் அமைப்புடன் கைகோத்துள்ளதை இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்கு ஆஸ்கர், எமி ஆகிய திரைத் துறை விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டீவ் காரெல் குரல் கொடுக்கு உள்ளார். இந்த விளம்பரம் ஸ்பெயின், ஃபிரான்ஸ், போர்ச்சுகல், அரேபி எனப் பல மொழிகளில் வெளிவர உள்ளது" என்றார்.
இல்யூமினேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிரிஸ் மெலதான்டிரியா பேசுகையில், "உலக சமுதாயத்தில் நேர்மறையான எண்ணத்தை விதைக்கக் கதை சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுகிறது. உலக சுகாதார அமைப்பு, ஐநா அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம்' - உலக சுகாதார அமைப்பு