ஜனவரி 20ஆம் தேதி, கமலா ஹாரிஸ் வரலாறு படைக்கவுள்ளார். இரு நூற்றாண்டு காலமாக அமெரிக்காவின் உயர் மட்ட அரசியலில் வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கவுள்ள முதல் பெண், முதல் கறுப்பினத்தவர், முதல் ஆசிய அமெரிக்கர் என்ற சாதனைக்கு சொந்தகாரராக உள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் துணை அதிபராவது இதுவே முதல்முறையாகும். ஜமைக்காவை சேர்ந்த ஒருவருக்கும் இந்திய நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் கமலா ஹாரிஸ் மகளாக பிறந்தார். கமலா ஹாரிஸ், ட்ரம்பின் நியமனங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் ஆவார். அதிபர் பரப்புரையின் போது, சாந்தமான போக்கை கடைபிடித்து ஜனநாயக கட்சியின் நட்சத்திரமாக திகழ்ந்தார்.
அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கவுள்ள முதல் பெண் என்ற வரலாற்றையும் அவர் படைக்கவுள்ளார். ஜனநாயக கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்கள், குறிப்பாக பைடன் அதிபராவதை விரும்பாதவர்கள், கமலா ஹாரிஸின் தேர்வால் உத்வேகம் அடைவார்கள் என அக்கட்சியை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கமலா ஹாரிஸின் பேச்சு, அமெரிக்க மக்களிடையே தனிப்பட்ட அளவில் ஆழமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கமலா ஹாரிஸ் ட்விட்டர் பக்கத்தில், "ஏதேனும் பிரச்னை இருந்தால், அதுகுறித்து புகார் தெரிவிக்காமல் அதனை தீர்ப்பதற்காக முயற்சி செய்ய வேண்டும் என எனக்கும், சகோதரிக்கும் எனது தாய் அறிவுரை கூறியுள்ளார். நமது கடமையை செய்யும்போதே மாற்றம் சாத்தியமாகும் என அவரால் உணர்ந்தேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
ட்ரம்ப், மைக் பென்ஸ், பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய நால்வரில் கமலாதான் வயதில் இளையவர். எனவே, வயதை கருத்தில் கொள்ளும்போது, 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பென்ஸ், கமலா ஆகிய இருவருக்கும்தான் அதிக வாய்ப்பு உள்ளது.