கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார்.
உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கும் நிதியை நிறுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் கரோனா பரவலை உலக சுகாதார அமைப்பு கையாண்டவிதம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "உலக சுகாதார அமைப்பு குறித்து விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். அநேகமாக அடுத்த வாரம் இது குறித்து அறிவிப்போம்.
கரோனா பரவலை நிர்வகிப்பதிலும் மூடிமறைப்பதிலும் உலக சுகாதார அமைப்பு எவ்வளவு முயன்றது என்பது குறித்து இந்த ஆய்வு விளக்கும்" என்று தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியாளர்கள் உலக சுகாதார அமைப்புக்குச் சீனாவைவிட அதிக நிதியை வழங்கியதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதையும் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று காரணமாக இதுவரை 14 லட்சத்து 57 ஆயிரத்து 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 83 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!