அமெரிக்காவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த ட்ரம்ப் அரசு தவறி விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், வெள்ளை மாளிகையில் உள்ள பலருக்கும் தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கரோனா பணிக்குழு உறுப்பினர் டாக்டர் அந்தோனி ஃபவுசி கூறுகையில், "உச்சநீதிமன்ற நீதிபதியை அறிவிக்கும் நிகழ்ச்சி, கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்டது. தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இதில் பங்கேற்ற பலரும் மாஸ்க் அணியவில்லை. அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.