சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, உலகின் மிகப் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால், அந்நாட்டு மக்கள் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ட்ரம்ப்பின் ஆட்சி விரைவில் நிறைவடையவுள்ள சூழலில், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் மீதான அதிருப்தியை எதிர்க்கட்சியினர், முன்னாள் அதிபர் ஒபாமா மீது திருப்பும் நோக்கில் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கைலே மெகென்னே, கரோனா போன்ற பெருந்தொற்றை எதிர்கொள்ள அன்றைய ஒபாமா அரசு வெறும் 69 பக்கங்களைக் கொண்ட செயல்திட்ட அறிக்கையை மட்டுமே உருவாக்கியிருந்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்திட்ட அறிக்கையை செய்தியாளர்களிடம் காட்டிய மெகென்னே, "கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் ட்ரம்ப் நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, பெருந்தொற்று பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு, ட்ரம்ப் நிர்வாகம் செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்க 2019ஆம் ஆண்டு 'கிரிம்சன் கன்டேஜியன்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியதாகக் கூறினார்.
இதையும் படிங்க : ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய பணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டும் - சீனா