நியூயார்க்கில் நடைபெற்றுவரும் 74ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நேற்று உரையாற்றினார்.
அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கியது இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து அங்கு ஊரடங்கு உத்தரவு நிலவிவருகிறது. 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை அந்நாட்டு ராணுவம் சிறைப்பிடித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும்போது அரசுக்கு எதிராக அம்மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தும். காஷ்மீரே ரத்தக்களரியாகும்.
அப்படி நடக்கும்போது இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். புல்வாமா தாக்குதலைப் போன்று மற்றுமொரு தாக்குதல் காஷ்மீரில் அரங்கேற வாய்ப்புள்ளது" என எச்சரிக்கைவிடுத்தார்.
அணு ஆயுத போர்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பேசிய இம்ரான், "பாகிஸ்தானை விட நான்கு மடங்கு பெரிதாக உள்ள நாட்டுடன் (இந்தியா) போர் மூண்டால் என்னவாகும்? நாங்கள் என்ன செய்வோம்? போரிடுவோம். அணு ஆயுதம் வைத்துள்ள இரண்டு நாடுகள் மோதினால் என்ன நடக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பார்க்க வேண்டும்" என மிரட்டும் பாணியில் கூறினார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இல்லை
தொடர்ந்து பேசிய இம்ரான் கான், "2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்குபெற்று வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. அது உண்மையல்ல. வேண்டும் என்றால் ஐநா அலுவலர்களே அங்கு நேரில் வந்து ஆய்வு செய்யட்டும்" எனத் தெரிவித்தார்.
கால வரம்பை மீறிய இம்ரான்
ஐநா சபை பொதுக்கூட்டத்தில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பை (15 நிமிடங்கள்) தாண்டி, இம்ரான் கான் மிக நீண்ட நேரம் (50 நிமிடங்கள்) பேசினார். மேலும், தன் உரையின்போது பிரதமர் மோடியை 'குடியரசுத் தலைவர்' என்று தவறாகக் குறிப்பிட்டார். இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.