அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் ஆப்பிரிக்க அமெரிக்கர், கடந்த மே 25ஆம் தேதி காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பொது முடக்கத்தையும் பொருட்படுத்தாமல், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் இச்சம்பவத்தைக் கண்டித்தும் இனவெறிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் நுழைவுவாயிலைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் திரண்டு, நேற்று (ஜூன் 07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று முன்தினம் (ஜூன் 06) வெஸ்ட்மின்ஸ்டருக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இங்கிலாந்தில் அலுவலர்கள் திரளான மக்கள் கூட்டத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்திவரும் நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தை அடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஃப்ளாய்ட் இறந்தது முதல் உலகெங்கிலும் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள இனவெறிக்குத் தீர்வுகாண அரசுகளை அறிவுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: போராட்டத்தில் 23 காவலர்கள் படுகாயம்!