அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டன்கன் என்ற ஊரிலுள்ள வால்மார்ட்டில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வால்மார்ட் அங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
'இரண்டு ஆண் உடல்கள், ஒரு பெண் உடல் என மொத்தம் மூன்று உடல்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரு உடல்கள் காரின் உள்ளேயும் ஒரு உடல் காரின் வெளியேயும் இருந்தன. மேலும், கைத்துப்பாக்கி ஒன்றும் சம்பவ இடத்தில் இருந்தது' என்று காவலர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காரின் உள்ளே இருந்த ஜோடியை அங்கு வந்த நபர் திடீரென்று சுடத்தொடங்கினார் என்றும்; பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டுக் காரணம் அவர்களுக்குள் நிகழ்ந்த குடும்பச் சண்டையாக இருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூடு காரணமாக அப்பகுதியிலுள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அனுமதி இல்லாமலேயே துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும்... போலி பைசெப்ஸ் உருவாக்கிய குத்துச் சண்டை வீரர்..!