வெனிசுலா நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மடுரோ 2013 முதல் இருந்து வருகிறார். வெனிசுலா நாட்டில் ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் மடுரோவின் பதவுக்காலம் முடிவடைந்த நிலையிலும் தேர்தலை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதையடுத்து அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவரான குவைடோ அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் கடந்த ஐனவரி 23ம் தேதி தன்னை அந்நாட்டின் அதிபராக அறிவித்துக் கொண்டார். மேலும் குவைடாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்கா, இந்திய பணமதிப்பில் சுமார் ரூ.142 கோடியும், கனடா சுமார் ரூ.379 கோடி மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை தருவதாக உறுதியளித்திருந்தன.
இந்நிலையில் டீயன்டிடஸ் சர்வதேச பாலத்தை ஒரு பெரிய ஆரஞ்சு டேங்கர், இரண்டு பெரிய நீல கன்டெய்னர்கள் கொண்டு அடைக்கப்பட்டது. கொலம்பியாவில் உள்ள கியூடா பகுதி எல்லைக்கு அருகே தற்காலிக ஃபென்சிங் கொண்ட தடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குயெய்டோ வெனிசுலாவிற்கு வழங்குவதாக வாக்களித்த மனிதாபிமான உதவிகள், அந்த பாலத்தின் வழியாகத்தான் கொண்டுவர இருந்தது.
இதுகுறித்து வெனிசுலா நாட்டின் அதிபர் மடுரோ கூறுகையில், தங்களுக்கு சர்வதேச உதவிகள் தேவையில்லை என்றும் தங்கள் நாடு பிச்சைக்கார நாடல்ல என்றும் தெரிவித்துள்ளார். மடுரோவின் இந்த நடவடிக்கை சர்வதேச நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.