கோவிட்-19 தொற்று காரணமாக உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 37 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் தட்டம்மை, போலியா தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. "தற்போதுள்ள சூழ்நிலையில் தனி விமானங்கள் மூலம் மட்டுமே தடுப்பு மருந்துகளை அனுப்ப முடிகிறது. பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள நாடுகளால் தனி விமானங்களுக்குச் செலவு செய்ய முடிவதில்லை. இதனால் அந்நாட்டிலுள்ள குழந்தைகளுக்குத் தட்டம்மை, போலியோ தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்று அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2.4 பில்லியின் தடுப்பு மருந்துகளை யுனிசெஃப் அனுப்பியிருந்தது. ஆனால் கோவிட்-19 பரவல் காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், தடுப்பு மருந்துகள் விநியோகிப்பதில் சுமார் 70 முதல் 80 விழுக்காடுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
பெனின், நைஜர், தஜிகிஸ்தான், கம்போடியா, மங்கோலியா, சாலமன் தீவுகள் உள்ளிட்ட 26 நாடுகள் பெரும் ஆபத்திலுள்ளதாகவும் தடுப்பு மருந்துகள் உரிய நேரத்தில் சென்றடையவில்லை என்றால் பல தொற்றுகள் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் யுனிசெஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் தடுப்பூசிகளுக்கு எதிரான மனநிலையைச் சுயநலத்திற்காகச் சிலர் திட்டமிட்டுப் பரப்பிவருகின்றனர். இந்நிலையில் யுனிசெஃப் அமைப்பின் இந்த அறிவிப்பு, அழிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட தட்டம்மை உள்ளிட்ட தொற்றுகள் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதை தெளிவாகக் காட்டுகிறது.
கோவிட்-19 பரவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற தொற்றுகள் மீண்டும் பரவ வழி செய்துவிடக்கூடாது என்றும் உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்துகளை கிடைப்பதைச் சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீது பரிசோதனையை தொடங்கிய அமெரிக்கா!