நாம் பயன்படுத்திவரும் 4ஜி இணையச் சேவையைத் தொடர்ந்து, ஒரு முழு படத்தை சில நொடிகளில் டவுன்லோட் செய்ய வழிவகை செய்யும் அதிவிரைவான 5ஜி இணைய சேவை சமீபத்தில் அறிமுகமானது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், 5ஜி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொலான்டு ட்ரம்ப், 4ஜி-யைப் போல் இல்லாமல், மொபைல், டேப்லெட், கணினி, தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் சிட்டிகளில் பயன்படுத்தும் இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) உள்ளிட்ட அனைத்துக்கும் தடையில்லாத இணைய சேவையை அளிக்க 5ஜி உதவும்.
இதற்கு செய்யப்படும் முதலீடுகளுக்கு அதிகப்படுத்த வயர்லெஸ் அலைக்கற்றையை (Wireless Spectrum) என் தலைமையிலான அரசு முடிந்தளவு மக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கும். அதற்கு தேவையான கட்டமைப்புகள் செய்துதரப்படும்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சந்தைகள் தயாராகும் என்றும், 5ஜி பந்தயத்தில் அமெரிக்கா கண்டிப்பாக வெற்றிபெறும் எனவும் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவின் அலைக்கற்றை ஒழுங்குப்படுத்தும் ஃபெடரெல் கம்யூனிகேஷன்ஸ் ஆணையம் (Federal Communication Commission), அந்நாட்டின் மிகப்பெரிய 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றும், கிராமங்களில் அதிவேக இணைய சேவைக்கு சுமார் 20 பில்லியின் டாலர் செலவிடப்போவதாகவும் ஏப்ரல் 5ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.