கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், அதனைத் தணிக்கும்விதமாக கிழக்கு லடாக்கில் ராணுவப் படைகளைத் திரும்பப்பெற இந்திய, சீன நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இரண்டு நாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அமைதியை நோக்கிய அவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து நாடாளுமன்றத்தில் கூறுகையில், "பாங்காங் ஏரியின் வட மற்றும் தென்கரையில் ராணுவப் படைகளைத் திரும்பப்பெற இந்திய, சீன நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல கட்டங்களாக ஒருங்கிணைப்புடன் முறையான வகையில் இருதரப்பும் படைகளைத் திரும்பப்பெற்றுக் கொள்ளும்" என்றார்.
இது குறித்து அமெரிக்க அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ராணுவம் திரும்பப்பெறும் நடவடிக்கையின் முதல்கட்டத்தை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம்" என்றார்.