வாஷிங்டன்: கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் மும்முரமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களுக்குப் பல சலுகைகளை அறிவித்து, தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றனர்.
இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நட்பு நாடுகள் தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வரிசையில், உலக நாடுகளுக்கு உதவிட அமெரிக்காவின் பைடன் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுமார் 500 மில்லியன்(50 கோடி) கரோனா தடுப்பூசிகளை பைஃசர் நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது.
அதனை, கோவாக்ஸ் திட்டம் மூலம் 92 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நன்கொடையாக வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பைஃசர் தடுப்பூசியை அமெரிக்காவில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் செலுத்த அந்நாட்டு அரசு சோதனை நடத்தி வருகிறது.