வாஷிங்டன்: இந்தியாவில் நேற்று (ஏப்.27) காலை 8 மணி வரையிலான, முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் மருத்துவத் துறை திணறிவருகிறது. உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிவருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது,
"இந்தியப் பிரதமர் மோடியுடன் நிறைய விஷயங்களைப் பேசியுள்ளேன். கரோனாவுக்கான சிகிச்சைக்குத் தேவைப்படும், குணமடைய உதவும் ரெம்டெசிவிர், பிற மருந்துகளை வழங்குவது உள்பட இந்தியாவுக்குத் தேவைப்படும் முழு அளவிலான தொடர்ச்சியான உதவிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பிவருகிறது.
கரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான இயந்திரங்களுக்குத் தேவையான இயந்திர பாகங்களையும் நாங்கள் அனுப்பிவைத்துவருகிறோம். இந்தியாவுக்குத் தடுப்பூசிகளை எப்பொழுது எங்களால் அனுப்பிவைக்க முடியும் என்பது பற்றியும் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதித்துள்ளேன்.
நாங்கள் தொடக்க காலத்தில் சிக்கலிலிருந்த தருணத்தில் இந்தியா எங்களுக்கு உதவி செய்தது" எனப் பேசினார்.