கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளன. இந்த வென்டிலேட்டர்கள் மூலம் மக்கள் செயற்கையாக ஆக்சிஜன் பெற முடியும்.
இதனால் வென்டிலேட்டர்களைப் பகிர்வது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட கடுமையான சுவாசக் கோளாறு பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு கடைசி முயற்சியாக இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சியாளர் ஸ்ரீநிவாசன் பேசுகையில், ''ஒரே இயந்திரத்தில் காற்று குழாய்களைப் பிரிப்பதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பேர் பயன்படுத்தும் வகையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது'' என்றார்.
ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் சரியான அளவில் ஆக்சிஜன் கிடைக்கிறதா என்று உறுதிசெய்வதில் சிரமம் உள்ளது எனப் பல்வேறு மருத்துவ சங்கங்களும் விமர்சித்துள்ளன.
இதனிடையே எம்ஐடி உதவி பேராசிரியர் ட்ரவெர்சோ (Traverso) பேசுகையில், ''இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் பகிர்வு சிகிச்சைக்கு செல்ஃவ் (shelve) கூறுகள் தேவைப்பட்டன. நோயாளிகள் கடைசி கட்ட முயற்சிக்காக மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள ஆலோசனை கூறியுள்ளோம்.
வென்டிலேட்டர்களின் வால்வுகள் (valves) மூலம் பகிரும்போது நோயாளிகளுக்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில்தான் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் நோயாளிகள் யாருக்கேனும் அதீத ஆக்சிஜன் செல்வதை அறிய எச்சரிக்கை ஒலி எழுப்பும் அம்சமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செல்வதை எளிதாக இவ்வகையான வென்டிலேட்டர்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்'' என்றார்.
இந்த வகையான வென்டிலேட்டர்கள் மூலம் 6 முதல் 8 பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்டோருக்கு இவ்வகையான வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தினால் சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வென்டிலேட்டர்கள் மூலம் செயற்கை நுரையீரலுடன் சேர்த்து, பன்றிக்கும் முதலில் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட நுரையீரல் மாறுதல்களைக் கண்டறிந்து வென்டிலேட்டர்களின் ஆக்சிஜன் சப்ளை சரிசெய்யப்பட்டது. பின்னர் இரு விலங்குகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து சோதனைசெய்யப்பட்டு, ஆராய்ச்சி முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: மருத்துவர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்கும் கண்ணாடிப் பெட்டி!