மியான்மரில் ராணுவ ஆட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறைப்பிடித்து வைத்துள்ளது. மியான்மரில் உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில சமயங்களில், இணைய சேவைகள் முடக்கப்பட்டுவருகின்றன.
ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது, ராணுவத்தினர் தடியடி நடத்திவருகின்றனர். அந்த வகையில் நேற்று (பிப். 28) மக்களின் உரிமை போராட்டத்தை ராணுவத்தினர் அடக்க முயன்றதால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது.
இதில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தச் சர்வாதிகார செயலுக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மியான்மரில் சமீபத்திய போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அமெரிக்க அரசு தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. மியான்மர் மக்களுக்கான எங்களின் ஆதரவை வலுப்படுத்திவருகிறோம். மியான்மர் வன்முறையைக் கையாள புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்டில், "பர்மா மக்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டிக்கிறோம்.
பர்மா மக்களுடன் நிச்சயம் நாங்கள் துணைநிற்போம். இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்
இதையும் படிங்க: மியான்மர் ராணுவத்திற்கு எதிரான பேச்சு; ஐநா தூதர் நீக்கம்