கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, தற்போது அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிவருகிறது. கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்காவில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் இதுவரை 225க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் எட்டு பில்லியன் டாலர்களை அவசர நிதியாக ஒதுக்குவது குறித்த மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கலானது.
இந்த மசோதாவில் வாக்களிக்க ப்ளோரிடா மாகாண குடியரசுக் கட்சியின் உறுப்பினர் மாட் கெய்ட்ஸ் முகமூடி அணிந்தவாறே அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்தார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கோவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முகமூடியை அணிந்ததாகவும் அவர் கூறினார். கோவிட் 19 வைரஸ் தொற்றின் அபாயத்தை விளக்கும் வகையில் இந்தப் புகைப்படம் உள்ளதாகக் கூறி அனைவரும் அதை பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்சால் சீனாவுக்கு கிடைத்த ஒரே நன்மை!