அமெரிக்காவில் உள்ள ஆக்லஹோமா நகரில் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொன்று, அவரது இருதயத்தை வெளியே எடுத்து உருளைக்கிழங்குடன் வதக்கிச் சாப்பிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
42 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன், தனது பக்கத்து வீட்டிலிருக்கும் ஆண்ட்ரியா லின் பிளாங்கென்ஷிப் என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது இருதயத்தை வெளியே எடுத்து அதை உருளைக்கிழங்குடன் வதக்கி தன் குடும்பத்தினருக்கு விருந்தாக்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, அதே நாளில் தனது மாமா லியோன் பை, மாமாவின் பேத்தி 4 வயதான கியோஸ் யேட்ஸ் ஆகியோரையும் கொன்றுள்ளார். இதில், அவரது அத்தை டெல்ஸி பை மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் ஒரு அறையில் பதுங்கியிருந்த ஆண்டர்சனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜரான ஆண்டர்சன், தனது தவறை நினைத்து மனம் வருந்தியதாகக் கூறப்படுகிறது. பெண்ணைக் கொன்று இருதயத்தை வதக்கிச் சாப்பிட்டது வீட்டைப் பீடித்திருந்த பேய் பிசாசை விரட்டவே என்ற அதிர்ச்சி வாக்குமூலத்தைத் தெரிவித்துள்ளார். தற்போது, அவர் கொலை செய்வதில் ஈடுபட்ட போது போதை மருந்து உட்கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு ஏற்கனவே, 2017ஆம் ஆண்டு போதை மருந்து மற்றும் ஆயுத வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனையை ஆளுநர் 9 ஆண்டுகளாகக் குறைத்தார். தற்போது, பரோலில் விடுதலையாகி தன் அத்தை மாமாவுடன் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூட நம்பிக்கையால், பலரின் உயிர் போயிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் காதல்- காதலி வீட்டில் காதலன் தற்கொலை!