பிரிட்டனிடமிருந்து 1997ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மற்ற அனைத்துத் துறைகளையும் மக்களால் ஹாங்காங் அரசே நிர்வகித்துவருகிறது. இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா தொடர்ந்து பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது. இந்நிலையில், ஹாங்காங் தேசியப் பாதுகாப்பு மசோதாவை சீன அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
சீனா தாக்கல் செய்துள்ள இந்த மசோதா, ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மசோதாவில் தொடர்புடைய அனைத்து சீன கம்யூனிச கட்சியினருக்கும் அமெரிக்காவில் நுழைய விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அந்நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், "ஹாங்காங் பகுதியின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மசோதாவைத் தாக்கல் செய்த சீன கம்யூனிச கட்சியினர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிபர் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங் பகுதியில் மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் சீன அரசு தொடர்ந்து மீறிவருகிறது. மேலும், ஜனநாயகத்தை ஆதரிக்கும் சமூக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்யவும், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களைத் தகுதிநீக்கம் செய்யவும் உள்ளூர் அலுவலர்களுக்கு சீனா தொடர்ந்து அழுத்தம் தருகிறது. 1984ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீன-பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தொடர்ந்து நடந்துகொள்கிறது.
ஹாங்காங் தன்னாட்சியை நீக்கிய சம்பவத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்து சீன கம்யூனிச கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய விசா வழங்கப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சீன ராணுவத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தயார்' - பாம்பியோ