உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் 3 லட்சத்தை தாண்டுகிறது நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா சிகிச்சைக்கு ரெம்டிசிவர் மருந்தை பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை பயன்படுத்திய நோயாளியின் உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். சமீபத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான அதிபர் ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட மருந்துகளில் ரெம்டிசிவர் மருந்தும் அடங்கும்.
இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் கடந்த மே மாதம் முதல் ரெம்டிசிவர் மருந்து அவசர கால சிகிச்சைக்கு மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் வயது 12க்கு மேலாகவும், குறைந்தது 40 கிலோ எடை இருக்கும்பட்சத்தில் ரெம்டிசிவரை பயன்படுத்த முழு ஒப்புதல் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலானது பல மருந்து உற்பத்தியாளர்கள் நடத்திய சோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. இது மூன்று பரிசோதனை மையங்களில் மிதமானது முதல் கடுமையான கரோனா பாதிப்பில் சிக்கி தவிக்கும் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை ஆகும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், இந்த ரெம்டிசிவர் மருந்தால் கரோனா சிகிச்சைக்கு பலனில்லை என்பது உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரியவந்தது ஆனால், இதற்கு மருந்து உற்பத்தியாளர்கள் தரப்பில் தவறான பரிசோதனை முடிவு என கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.