அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 30 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் 28 இடங்களில் பற்றி எரிந்துவரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு காற்றின் தரம் மோசமடைந்ததுள்ளதாக வானிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது, இந்தக் காட்டுத்தீ அருகிலிருக்கும் மாகாணங்களுக்கும் பரவ தொடங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இந்தக் காட்டுத்தீயால் அதிக அளவிலான கார்பன் மோனாக்சைடு வளிமண்டலத்தில் பரவியுள்ளதாக நாசா அனிமேஷன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 6 முதல் 14ஆம் தேதி இடையில் மட்டும் வளிமண்டலத்தில் மூன்று மைல் (ஐந்து கிலோமீட்டர்) உயரத்திற்கு கார்பன் மோனாக்சைடு பரவியுள்ளதை தெளிவாக காட்டுகிறது.
இந்த கார்பன் மோனாக்சைடு அதிகரிப்பானது நாம் சுவாசிக்கும் காற்றில் சிறிதளவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என நாசா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.