வாஷிங்டன் - அமெரிக்கா: கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட உள்நாட்டுத் தடுப்பூசி ஆகும். ஹைதராபாத்தின் பாரத் பயோ டெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து இத்தடுப்பூசியை உருவாக்கியது.
இந்தத் தடுப்பூசியை சுமார் 14 நாடுகளில் அவசரக் கால பயன்பாட்டிற்குச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுமதிக்காகக் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த அந்நாட்டின் ஆக்குஜென் என்ற நிறுவனம், பாரத் பயோ டெக்-வுடன் ஒப்பந்தம் போட்டிருந்ததது.
அதன்படி, எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம், அவசரக்கால பயன்பாட்டிற்கு கோவாக்சினை அனுமதிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த மருந்து குறித்த போதுமான தகவல்கள் இல்லை என்றும், கூடுதல் தகவல், தரவுகளைச் சேர்த்து விண்ணப்பிக்குமாறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவில் கோவாக்சினை விற்பனைசெய்வதற்கான பிரத்யேக உரிமைகளையும் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து ஆக்குஜென் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.