கரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனா இருந்தாலும் அதன் மையப் பகுதியாக அமெரிக்கா மாறிவிட்டது. கடந்த சில நாள்களாக இப்பெருந்தொற்றால் அந்நாட்டில் அதிகரித்துவந்த பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,798 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,37,633ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் இதுவரை 2,00,628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம், இத்தொற்றால் நேற்று அந்நாட்டில் 2,350 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,271ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் இத்தொற்றால் 2,58,338 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் கால் பங்கு அமெரிக்காவில்தான் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸால் நியூயார்க் நகர்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இதுவரை 3,21,192 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25,073 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நியூ ஜெர்சியில் 1,30,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,244 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை வெல்ல ஆன்டிபாடி கண்டுபிடிப்பு!