ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர் நாவல்னி. உணவில் விஷம் வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்ட நாவல்னி அண்மையில் ரஷ்யா திரும்பினார். பழைய வழக்கு ஒன்றில் பிணை பெற்றிருந்த நாவல்னி, மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நாவல்னியை விடுவிக்கக் கோரி நேற்று (ஜன. 23) ரஷ்யா தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் காவல் துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அந்தவகையில் மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் சிலரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “கைது செய்யப்பட்டுள்ள நாவல்னியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். தங்களது சர்வதேச உரிமைகளை பயன்படுத்திய போராட்டக்காரர்களையும், பத்திரிகையாளர்களையும் விடுவிக்க வேண்டும்” என்றார்.
மேலும், ரஷ்யாவிலோ அல்லது எங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா துணை நிற்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனாவால் உயிரிழக்கலாம் - ஜோ பைடன்