அமெரிக்க விமானப் படையின் புதிய தளபதியாக ஜெனரல் சார்லஸ் பிரவுன் ஜூனியரை செனட் சபை (நாடாளுமன்ற மேல் சபை) கடந்த செவ்வாய்க்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. ஆப்பிரிக்க - அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க விமானப் படை தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க - அமெரிக்கர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால், அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திக்குமுக்காடிப் போயுள்ள சூழலில், சார்லஸ் பிரவுன் தற்போது விமானப் படை தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 5ஆம் தேதி) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட உருக்கமான காணொலிப் பதிவில், விமானப் படையில் தான் எதிர்கொண்ட இனக் காழ்ப்புணர்ச்சிகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
மற்றவர்கள் அணியும் அதே சீருடையையும், பேட்ஜையும் தான் அணிந்திருந்தும், ’நீங்கள் விமான ஓட்டியா?’ என்ற கேள்வியை பலமுறை தான் சந்தித்ததாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க பாதுகாப்புப் படைகளில் 17 சதவிகிதம் பேர் ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் ஆவர். ஆனால், விமானப் படையில் 15 சதவிகிதத்துக்கும் குறைவான ஆப்பிரிக்க - அமெரிக்கர்களே பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ட்ரம்ப் முரண்டுபிடித்தாலும் அமெரிக்கா மீது நம்பிக்கை உள்ளது - உலக சுகாதார அமைப்பு