வாஷிங்டன்: மேலும் சீனாவின் வர்த்தக ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுவதற்கான புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டுவருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்காக சீனா உடன்பாடு குறித்த ஆண்டறிக்கை குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஒருவர் புதன்கிழமையன்று (பிப்ரவரி 16) கூறுகையில்,
"164 நாடுகளைக் கொண்ட ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட முகமையுடன் 2001இல் சீனா இணைந்தபோது, தனது சந்தைகளை வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் திறந்துவைப்பதாக அப்போது அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர், "சீனா அதற்குப் பதிலாக பொருளாதாரம், வர்த்தகத்தில் அதன் அரசு தலைமையிலான, சந்தை அல்லாத அணுகுமுறையைத் தக்கவைத்து விரிவுப்படுத்தியுள்ளது. சீனாவின் கொள்கைகள், நடைமுறைகள் உலக வர்த்தக அமைப்பின் முக்கிய விதிகளுக்குச் சவால்விடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், வியாபாரங்களுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும்" என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.
வெளிநாட்டுப் போட்டியாளர்கள் இழப்பைச் சந்திக்கும் வகையில், சீனா தனது சொந்த நிறுவனங்களுக்கு மானியங்கள், விதிமுறைகளைப் பயன்படுத்துகிறது என அமெரிக்கா நீண்ட காலமாகக் குற்றச்சாட்டு வைத்துவருவது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
"பொருளாதாரம், வர்த்தகத்திற்கான தனது அரசு தலைமையிலான, சந்தை அல்லாத அணுகுமுறையில் சீனாவின் தலைமை நம்பிக்கையுடன் இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் உலகளாவிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறது" எனச் சீனாவின் செயல்பாடு குறித்து அமெரிக்கா விமர்சனம் செய்தது.
சீனாவின் பொருளாதாரம், வர்த்தகத்தின் உண்மையான மாற்றம் தொடர்பாகப் பெறுவது குறித்து அந்நாட்டுடன் பேசிவருவதாக அமெரிக்க வர்த்தக அலுவலகம் கூறியுள்ளது. சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் உலக வர்த்தக அமைப்பு மூலமாக முயன்றுவருகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தைத் தணிக்க 2020 ஜனவரியில் அமெரிக்கா-சீனா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமெரிக்க பண்ணைப் பொருள்கள் வாங்குவதை அதிகரிக்க சீனா ஒத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பன்னாட்டு வர்த்தக நிறுவனமான பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சீனா - அமெரிக்க ஏற்றுமதியில் 57 விழுக்காட்டை மட்டுமே வாங்கியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் வரலாற்று உச்சம்: 45% அதிகரித்த இந்திய-அமெரிக்க வர்த்தகம்!