கரோனா காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஃபைஸர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்துகளின் மூன்றாம்கட்ட சோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. அனைத்து நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தையே எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், "கரோனா தடுப்பு மருந்தின் சோதனை முடிவுகளை வைத்து பார்க்கும்போது, உலகம் பெருந்தொற்று இல்லாத காலத்தை விரைவில் எதிர்நோக்கலாம் என்று தெரிகிறது.
இந்த பெருந்தொற்று மனிதகுலத்தின் மோசமான குணங்களையும் சரி மிகச் சிறந்த குணங்களையும் சரி வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. பொதுமக்களின் இரக்கம், சுயநலமற்ற செயல், அறிவியல் புதுமை உள்ளிட்டவை பாராட்டும் வகையில் இருந்தாலும், சிலரின் சுயநல போக்கும் குழப்பமான அணுகுமுறைகளும் மற்றவர்கள் மீது பழிபோடும் குணமும் இந்தக் காலத்தில் நமக்கு தெளிவாகத் தெரிந்தது.
எங்கெல்லாம் பொய் கதைகள் பரப்பப்படுகிறதோ, எங்கெல்லாம் ஒற்றுமை சீர்குலைக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் சுயநலம் மேலோங்குகிறதோ அங்கெல்லாம் வைரஸ் அதிகமாக பரவுகிறது.
மேலும், கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, அது விரைவாக அனைவருக்கும் எடுத்துச் செல்லப்படும் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை. பணக்கார நாடுகளால் ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுவது தடைப்படலாம்.
இதையெல்லாம் முறைப்படுத்தி, சரியான முறையில் தடுப்பு மருந்தை அனைத்து நாடுகளுக்கும் விநியோகிக்க உலக சுகாதார அமைப்பு ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தடுப்பு மருந்து கொள்முதல், விநியோகம் என இதற்கான அடித்தளத்தை அமைக்க உடனடியாக 4.3 பில்லியன் டாலர் தேவை. 2021ஆம் ஆண்டு கூடுதலாக மேலும் 23.9 பில்லியன் டாலர் தேவை. இது வளர்ந்த 20 நாடுகள் அறிவித்த 11 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
பல நாடுகளும் தொற்றை எதிர்கொள்வதில் தயாராக இருக்கவில்லை. தங்கள் நாடுகளின் சுகாதார கட்டமைப்புகள் தங்கள் மக்களைப் பாதுகாக்கும் என்று கருதின. இந்த பெருந்தொற்று நெருக்கடியைச் சிறப்பாக சமாளித்த பல நாடுகளுக்கு ஏற்கனவே SARS, MERS போன்ற தொற்றுகளை சமாளித்த அனுபவம் இருந்தது.
உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 10 விழுக்காடு அதாவது 7.5 டிரில்லயன் டாலர் சுகாதாரத்திற்காக செலவிடப்படுகிறது. இதில் பெரும்பாலான தொகை பணக்கார நாடுகளாலேயே செலவிடப்படுகிறது.
அவர்களும்கூட பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு குறிப்பிட்ட தொற்றுக்கு சிகிச்சை அளிக்கவே பணத்தை செலவிடுகின்றன" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்படாது - ஜோ பைடன்