அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கு இனி தனது வலைதளத்தில் இடமில்லை என முன்னணி சமூக ஊடகமான ட்விட்டர் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சிக்குப்பின் பல அரசியல் கட்சிகள், இந்த வலைதளங்களை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திவருகின்றன. குறிப்பாக பல்வேறு கட்சிகளின் தொழில்நுட்பப் பிரிவுகள் (ஐ.டி. விங்) சுழன்றடித்துக் கொண்டு, மக்கள் மத்தியில் தமது கட்சிகளை முன்னிலைப்படுத்தி வருகின்றன.
அதேவேளையில், சமூக வலைதளங்களால் பொய்யான தகவல்களும் உண்மை போலவே பகிரப்பட்டு, மக்கள் தவறான வழியில் திசைத்திருப்பப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது அதிகமாக எழுந்துவருகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள், போலி தகவல்கள் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு மக்களிடம் கொண்டுசெல்லப்படுவது பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இதற்கு முடிவுகட்டும் விதமாக ட்விட்டர் தற்போது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 'இனி அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் தங்கள் வலைதளத்தில் இடம்பெறாது' என ட்விட்ரின் இணைநிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான ஜாக் டோர்சே தெரிவித்துள்ளார். இணையதளம் போன்ற சக்திவாய்ந்த கருவி தவறான காரியங்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது, பணத்திற்காக உண்மைக்கு மாறான செயல்களில் ஈடுபடக் கூடாது என நம்புவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சமூக வலைதளமான முகநூலும் தனது பக்கத்தில் அரசியல் விளம்பரங்களை நீக்க வேண்டும் என, அமெரிக்க நாடாளுமன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இம்முடிவுக்கு உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொழில்துறை கண்காட்சி!