2018ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் நடைபெற்றுவருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் முடிவெடுத்ததையடுத்து, சீரான இடைவெளியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதன் விளைவாக, சீனா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
அதன்படி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரு நாட்டு உயர் அலுவலர்களும் இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் கடந்த வாரம் பத்தாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 10 மாதங்களாக, 50 பில்லியன் டாலர் மதிப்பிலான உயர்தர தொழில்நுட்ப சாதனங்களுக்கு 25 விழுக்காடு வரியையும், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பிற பொருட்களுக்கு 10 விழுக்காடு வரியையும் சீனா செலுத்திவருகிறது. இதன் விளைவாக எங்களது (அமெரிக்கா) பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் கண்டுள்ளது.
இத்தகைய சூழலில் 10 விழுக்காடு உள்ள பிற சீன பொருட்களின் வரி 25 விழுக்காடாக உயர்த்தப்படும். அமெரிக்காவுக்கு சீனா செலுத்தும் வரியால் உற்பத்தி தொகையில் சிறிய தாக்கம் ஏற்படும், பெரும்பாலும் சீனா அதனை ஏற்றுக்கொள்ளும். சீனா உடனான வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். ஆனால் மிக பொறுமையாக மேற்கொள்ளப்படும்" என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தம் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.