கடந்த சில ஆண்டுகளாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவிவந்த நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வடகொரியாவிடம் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுதொடர்பாக, அமெரிக்கா - வடகொரியா ஆகிய இரண்டு நாடுகளில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அதிபர் கிம் உறுதியளித்தார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் அம்மாநாடு தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில், சமீபத்தில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை, கிம் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இத்தகைய சூழலில், வட கொரியா தனது கிழக்குக் கடல் பகுதியில் குறுகிய தூரம் வரை சென்று தாக்கும் சக்திகொண்ட ஏவுகணை சோதனையை கடந்த 4ஆம் தேதி நடத்தியதாகவும், உள்ளூர் நேரப்படி சரியாக 9.06 மணிக்கு இந்தச் சோதனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் ட்ரம்ப், தென் கொரியாவில் அந்நாட்டு அதிபர் மூன் ஜே-வை, சந்தித்து பேச உள்ளார். அப்போது, வடகொரியாவின் சமீபத்திய அணு ஆயுத சோதனை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொள்வர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.