அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் மீண்டும் இரண்டாவது முறையாகக் களமிறங்குகிறார்.
இதனையொட்டி ட்ரம்ப் மேற்கொண்டுவந்த தேர்தல் பரப்புரைகள், கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒக்லஹோமா மாகாணத்திலிருந்து தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (ஜூன் 10) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள துல்சாவிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கப்போவதாகவும், அதனைத் தொடர்ந்து புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, நார்த் கரோலினா ஆகிய மாகாணங்களில் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ட்ரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் மூத்தத் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் அதிபர் ட்ரம்ப்பைவிட, 77 வயதான ஜோ பிடனுக்கே அதிக ஆதரவு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கரோனா பெருந்தொற்றை அமெரிக்க அரசு கையாண்டவிதம், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்றுவரும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
2016 அதிபர் தேர்தலைவிட இந்தத் தேர்தல் ட்ரம்ப்புக்குச் சவாலாக அமையும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸின் சிலைக்கு தீவைப்பு!