அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கனடா, இத்தாலி ஆகிய வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பே ஜி7 என்ற அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாடுகளின் தலைவர்கள் ஜி7 உச்சிமாநாட்டில் நேரில் கலந்துகொண்டு உலகம் எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பர்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஜி7 உச்சிமாநாட்டை அமெரிக்க எடுத்து நடத்த உள்ளது. ஆனால், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று உலகை திணறடித்துவரும் வேளையில் உச்சிமாநாடு காணொலி வாயிலாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், ட்ரம்போ ஜி7 மாநாட்டை கேம்ப் டேவிட்டில் (அமெரிக்க அதிபரின் கேளிக்கை விடுதி) நடத்தலாம் என கடந்த ஒரு வாரமாக நச்சரித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பு செயலர் கெய்லி மெகெனனி, "ஜி7 உச்சிமாநாட்டை கேம்ப் டேவிட்டில் நடத்த வேண்டும் என அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு விரைவில் அமெரிக்கா இயல்புநிலைக்குத் திரும்புவதை உணர்த்துவதற்கு ஜி7 ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என அதிபர் நினைக்கிறார்.
ஜி7-இல் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இந்த யோசனைக்குப் பல வெளிநாட்டுத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்