வெனிசுவேலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ, தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.
இதற்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எனினும், அதிபர் பதவியிலிருந்து தான் இறங்கப் போவதில்லை என்றும், பொதுத்தேர்தல் நடத்தப்படாது என்றும் மதுரோ அறிவித்தார்.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் மனிதாபிமான உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வரவும் தடை விதித்தார். இந்நிலையில், வெனிசூவேலாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா, தனது ராணுவத்தை இரண்டு விமானங்களில் கடந்த 23ஆம் தேதி வெனிசூலாவிற்கு அனுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பியது. ரஷ்யா தனது கட்டுப்பாடற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வெனிசூவேலா எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ மனைவி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யா தனது ராணுவத்தை திரும்பபெற வேண்டும். அமெரிக்காவின் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு நன்றாகத் தெரியும். கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும் வெனிசூவேலாவில் ராணுவதத்தைத் தவிற வேறு எந்த அழுத்தத்தையும் பெற முடியாது. அனைத்து வழிகளும் திறந்தே உள்ளது" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐ.நா.விற்கான ரஷ்யா தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்ஸ்கி, "ரஷ்யா - வெனிசூவேலா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. பிற நாடுகள் எடுக்கும் முடிவுகளில் அமெரிக்கா தலையிட முடியாது. இதில் முடிவெடுக்கும் பொறுப்பு வெனிசூவேலா அதிபர் மதுரோ மற்றும் நாட்டு மக்களிடம் மட்டுமே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
வெனிசூவேலா மீது அமெரிக்கா விடுத்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.