அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி, ட்ரம்ப் மும்முரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த சூழலில், கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் தேர்தல் பரப்புரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒக்லஹோமா மாகாணம் துல்சா நகரில் நேற்று மீண்டும் பரப்புரை தொடங்கியது.
இதனிடையே, தேர்தல் பரப்புரை நடந்த அரங்கிற்கு வெளியே நிறவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்துள்ளள்ளது. அப்போது, அரங்கிற்கு வெளியே ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. பின்னர் காவல் துறையினரின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த வார்த்தைப் போர் முடிவுக்கு வந்தது.
தேர்தல் பரப்புரை நடந்த அரங்கிற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்களை நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக, குடியரசுக் கட்சி தேர்தல் பரப்புரை அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என சம்பவ இடத்திலிருந்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா - சீனா இடையே சுமுகத் தீர்வு: நேபாளம் நம்பிக்கை