அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் இருவருக்கும் கடந்த இரண்டாம் தேதி (அக்டோபர் 2) கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட ட்ரம்ப், அங்குள்ள வால்ட்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் கண்டது. இதையடுத்து நான்கே நாள்களில் தனது வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப், நிர்வாக மற்றும் தேர்தல் வேலைகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளார்.
கரோனா பாதிப்பிற்கு பின் தனது முதல் நேர்காணலை பாக்ஸ் செய்தி தொலைக்கட்சிக்கு அதிபர் ட்ரம்ப் நேற்று அளித்தார். தனது உடல்நிலை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், தன்னை சிறப்பாக கவனித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு மிகவும் பாராட்டினார்.
உடல்நிலை சீராக உள்ளதால் தற்போது மருந்துகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்த அவர், முழுமையாக தொற்றிலிருந்து மீண்ட பின் தனது பிளாஸ்மாவை சிகிச்சைக்காக தானம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு தடை!