லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று (ஆக.4) சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்த நிலையில், மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டடங்கள் உள்பட பொதுச் சொத்துக்கள் பயங்கர சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், இந்த விபத்தே திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என ராணுவப்படை தளபதிகள் தன்னிடம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், "விபத்து மாதிரி அது தெரியலாம். ஆனால், நான் சந்தித்த ராணுவப்படை தளபதிகள் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் அதனை குண்டு வெடிப்பாக இருக்கலாம் என கருதுகிறார்கள்.
உயிரிழந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். லெபனானுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. அது மிருகத்தனமான தாக்குதல்" என்றார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரிடம் இதுகுறித்து மீண்டும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அவர் பதில் கூற மறுத்துவிட்டார். விபத்தின் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. துறைமுகத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட செய்திகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: 'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு