ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை (அரசியில் சாசன சட்ட பிரிவுகள் 370, 35ஏ) கடந்த 5ஆம் தேதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, காஷ்மீர் பிரச்னை குறித்து இருநாட்டு தலைவர்களுடனும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலம் ஆலோசித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக என்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரம்ப், பிரதமர் மோடி, இம்ரான் கானிடம் காஷ்மீர் குறித்து கேட்டறிந்ததாகவும், காஷ்மீர் பிரச்னை மிகவும் சிக்கலான ஒன்று எனவும் கூறினார். மேலும், இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக செயல்பட்டு காஷ்மீர் பிரச்னையை தீர்க்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
அதிபர் ட்ரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் உரையாடும்போது, இந்த விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.