அமெரிக்காவில் நாளை மறுநாள் (நவ. 3) அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகின்றார்.
தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியே முன்னணியில் உள்ளது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேபோல் வெள்ளையின மக்கள் ட்ரம்ப்பிற்கு ஆதரவளிக்கின்றனர்.
இந்நிலையில் இழுப்பறி மாகாணமாக கருதப்படும் ஐயோவா மாகாணத்தில் பிடனைவிட ஏழு விழுக்காடு வாக்குகளை ட்ரம்ப் கூடுதலாக பெறுவார் என்று டெஸ் மொய்ன்ஸ் பதிவு / மீடியா காம் தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. அதாவது ட்ரம்ப் 48 விழுக்காடு வாக்குகளையும், ஜோ பிடன் 41 விழுக்காடு வாக்குகளையும் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐயோவா மாகாணத்தில் ஜோ பிடனைவிட ட்ரம்ப் ஒரு விழுக்காடு மட்டுமே முன்னிலையில் இருந்தார். இழுப்பறி மாகாணமான ஐயோவா மாகாணத்தை கைப்பற்ற இரு கட்சிகளும் அங்கு மிகத் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளை இனமக்கள் அதிகம் வசிக்கும் ஐயோவா மாகாணத்தில் 2008 மற்றும் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றன.
இதையும் படிங்க: 'தேர்தல் முடிவுகள் தாமதம் ஆகலாம்' - எச்சரிக்கும் ட்ரம்ப்