2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை ( Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்த வலியுறுத்தலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டிற்கு அமெரிக்கா வழங்கிவரும் ராணுவ உதவிகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என ட்ரம்ப் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புகாரானது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை (நாடாளுமன்ற கீழ்) அவைத் தலைவர் நான்சி பெலோசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நான்சி பெலோசி, "அதிபர் ட்ரம்ப்பின் செயலானது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். அரசியல் லாபத்திற்காக உக்ரைன் நாட்டை வலியுறுத்தியதாக அதிபர் ட்ரம்ப்பே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான விளைவுகளை அவர் கண்டிப்பாக சந்திக்க வேண்டும்" என்றார்.
நான்சி பொலோசி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவராவார். இவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், "ஐநா பொதுக்கூட்டத்தில் என்னைக் கலங்கப்படுத்தும் நோக்கிலேயே ஜனநாயகக் கட்சியினர் செயல்பட்டுவருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் அதிபருடனான தான் மேற்கொண்ட உரையாடல் சட்டப்பூர்வமானது என்ற நிரூபிக்க, உரையாடலில் மொழிமாற்றத்தை (Transcript) வெளியிடுவேன் என்றும் ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை! முல்லா் குழு அறிக்கை தாக்கல்!