அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடவுள்ளார்.
இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் பிடன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் செய்து வரும் தொழில் தொடர்பாக விசாரணையை நடத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை வற்புறுத்தி, நெருக்கடி கொடுத்ததாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் ட்ரம்ப் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதோடு, அந்நிய நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டதன் மூலம் தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்ததாக ஜனநாயகக் கட்சியினர் (ட்ரம்ப்பின் எதிர்க்கட்சியினர்) குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து, ட்ரம்ப் மீதான புகாரை விசாரித்து அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் தலைமையில் நாடாளுமன்ற விசாரணைக் குழு செப்டம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையில் ஆஜரான உக்ரைன், அமெரிக்க தூதர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் வெளியான விசாரணை அறிக்கையில், அதிபர் ட்ரம்ப் தன் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி உக்ரைன் நாட்டுக்கு அழுத்தம் கொடுத்தற்கான ஆதாரங்கள் உள்ளதென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ட்ரம்ப்புக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை விசாரணைக் குழு கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு (கீழ் சபை) அனுப்பலாம் என வாக்கெடுப்பு மூலம் விசாரணைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்த வாரம் கூடவுள்ள பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும். பிரதிநிதிகள் சபையில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஜனநாயகக் கட்சியினர் என்பதால் இந்த தீர்மானம் எந்த ஒரு தடையுமின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "எந்த ஒரு தவறும் செய்யாத என்னைப் பதவி நீக்கம் செய்வது நியாயமில்லை. தீவிர இடதுசாரிகளான ஜனநாயகக் கட்சி வெறுப்பைக் கக்கும் கட்சியாக மாறியுள்ளது..." எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க : குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர்கள் குரல்!