வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாள்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின.
இதில் வடகொரியா நீண்ட மௌனம் காத்துவந்தது. கிம் மற்றும் அவரின் உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வடகொரியாவில் உர தொழிற்சாலை ஒன்றை கிம் திறந்து வைப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'கிம் நலமுடன், மீண்டும் திரும்பி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
எனினும் கிம் மீண்டும் தோன்றுவது குறித்து செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், வார இறுதியில் வட கொரிய அதிபருடன் பேச வாய்ப்புள்ளதா? என்று கேட்டபோது 'இருக்கலாம்' என்று பதிலளித்தார்.
அமெரிக்க சலுகைகளுக்கு ஈடாக வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ட்ரம்பும் கிம்மும் மூன்று முறை சந்தித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடந்த இரண்டாவது உச்சிமாநாட்டில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் இருவருக்கும் இடையே அதன்பின்னர் நிறுத்தப்பட்டன.