ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா-தலிபான்கள் இடையே பல கட்டங்களாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதன்படி, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ஐந்தாயிரம் ராணுவப் படையினரை அமெரிக்கா திரும்பப்பெறவும், தலிபான்கள் பயங்கரவாதத்தை கைவிடவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டால் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் இருந்தது.
இச்சூழலில், காபூலின் சாஷ் தரக் பகுதியில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தலிபான்களை நேரில் சந்தித்து தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததாகவும், ஆனால் காபூல் தாக்குதலைத் தொடர்ந்து அதனை ரத்து செய்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டில் கூறியுள்ளதாவது, "கேம்ப் டேவிடில் (CAMP DAVID) தலிபான்களுடன் ஞாயிற்றுக்கிழமை ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மிகச் சிறந்த அமெரிக்க படையைச் சேர்ந்த ஒரு வீரர் உள்பட 12 பேர் பலியாவதற்கு காரணமான காபூல் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதனால் அவர்களுடனான (தலிபான்கள்) பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டேன்.
அதிமுக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தையின்போதே தாக்குதல் நடத்தி 12 அப்பாவிகளை கொல்கிறார்கள் என்றால், நன்மைபயக்கும் ஒப்பந்தத்தை எட்ட வகைசெய்யும் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு திறனில்லை என்பதையே உணர்த்துகிறது.
இன்னும் எத்தனை காலத்துக்கு அவர்கள் போராட விரும்புகிறார்கள்?"
எனப் பதிவிட்டுள்ளார்.