அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது அதிபராகவுள்ள ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கரோனா பாதிப்பு காரணமாக சில நாள்கள் தனது பரப்புரை கூட்டங்களை ரத்து செய்திருந்த ட்ரம்ப், அதன் பின் தொடர்ந்து பல்வேறு பரப்புரை கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார்.
இந்நிலையில் பீனிக்ஸ் மாகாணத்தில் பரப்புரை கூட்டதில் கலந்துகொள்ளும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "பிடன் ஒரு கிரிமினல், அவரது லேப்டாப்பில் சில சர்ச்சைக்குரிய தகவல்கள் இருந்தன. அது குறித்து விசாரிக்க வேண்டும்.
ஒன்றை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன், பிடன் ஒரு கிரிமினல், அதில் மாற்றுக்கருத்தில்லை. அதை செய்தியாக்காத நீங்களும் கிரிமினல்தான். அவர் ஒரு வாரத்திற்கு முன்னரே சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக திங்கள்கிழமை, பிடனுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் லேப்டாப்பில் இருந்து சர்ச்சைக்குறிய கருத்துகள் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு ஆலோசகரை நியமிக்குமாறு குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் தனது கரோனா பரிசோதனை முடிவுகளை ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தனது மருத்துவர்கள் தேவையான தகவல்களை ஏற்கனவே அளித்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீங்க கொஞ்சம் 'ஷட்அப்' பண்ணுங்க - அதிபர் தேர்தல் விவாதத்தில் புதிய விதி