ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 167 பயணிகள் ஒன்பது விமான ஊழியர்களுடன் உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி உக்ரைன் சர்வதேச விமானம் நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் புறப்பட்டது.
இந்த நிலையில், புறப்பட்ட மூன்று நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழுந்த அந்த விமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியதில், விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர். இதில் 63 பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ட்ரம்பை தொலைபேசியில் அழைத்து உரையாடினார். அப்போது,
- விமான விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்,
- விபத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டியதன் அவசியம்
குறித்து இரண்டு தலைவர்களும் பேசியதாகக் கனடா பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "ஈராக்கில் நிலவிவரும் பதற்றநிலை, ஈரான் குறித்து அமெரிக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்த நகர்வுகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இருநாட்டு ராணுவத் தூதர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், ஈராக்கில் நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது, தொடர்ந்து அந்நாட்டுக்கு உதவிசெய்வது, தேஷை (ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு) ஒழிப்பது குறித்து பேசினர். உலக நாடுகளுடன் சேர்ந்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியை திரும்பக் கொண்டுவருவது குறித்து தொடர்பில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான்-அமெரிக்க மோதலை உச்சகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவிவருகிறது.
இதையும் படிங்க : கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்த பயங்கரமான விமான விபத்துகள்