கரோனா பெருந்தொற்றுக்கு அமெரிக்கா பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு லட்சத்தை நெருங்கிவருகிறது.
இந்நிலையில் வாழ்வு, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரபல நடிகை டினா ஃபே 115 மில்லியன் டாலர் நிவாரணமாக அளிக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.
கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, “ரைசிங் ஆஃப் நியூயார்க்” என்ற பெயரில் நடிகை டினா ஃபே-வால் நிதி திரட்டப்பட்டது.
தற்போது 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்ணீர் மல்க கூறிய நடிகை டினா ஃபே, அனைவருக்கும் நன்றி, நன்றி எனக் கூறினார்.
இந்த நிதி திரட்டும் நிகழ்வுக்கு மேலும் சில நடிகர்களும், நடிகைகளும் ஆதரவு கொடுத்தனர். இந்த நிதியுதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, இருப்பிடம், நிதி மற்றும் சட்ட உதவிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் கரோனா தீநுண்மி தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக நியூயார்க் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜே.கே. ரவுலிங், கரோனா நிவாரணமாக 10 லட்சம் பவுண்டு நிதியுதவி!