ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க். புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுவீடன் நாட்டின் நாடாளுமன்றம் முன் தனியொரு ஆளாகப் போராட்டத்தைத் தொடங்கினார் கிரெட்டா துன்பெர்க். இப்போது லட்சக்கணக்கான மாணவர்கள் இவருடன் இணைந்து Friday For Future என்று வெள்ளிதோறும் பள்ளியை புறக்கணித்து பருவநிலையைக் காக்க உலக தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உலகெங்கும் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து தங்கள் நகரங்களில் போராட்டத்தை நடத்திவருகின்றனர். ஐரோப்பாவில் தொடங்கி ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என உலகெங்கும் உள்ள இளைஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். அடுத்த வாரத்தில் மேலும் 163 நாடுகளிலிருந்து 5,800 வெள்ளிக்கிழமை பேரணிகள் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்ற 500 இளம் ஆர்வலர்களை ஐநா அழைத்தது. வரும் திங்கள்கிழமை பருவநிலை குறித்து ஐநாவில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு பேசிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் "இளைஞர்களாகிய நாங்கள் இப்போது ஒன்றுபட்டுள்ளோம். ஒன்றுபட்டுவிட்டால் இளைஞர்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு நாங்களே சிறந்த ஒரு உதாரணம். இப்போது நடைபெறும் போராட்டம் என்பது வெறும் தொடக்கம்தான்" என்றார்.
இதேபோல அர்ஜெண்டினாவில் போராட்டங்களை முன்னெடுத்த 19 வயதான புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez), "பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் என்பது எங்கள் காலத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார நெருக்கடி" என்று எச்சரித்தார். மேலும், "தற்போதைய தலைவர்கள் உருவாக்கிய பிரச்னைகளை எங்கள் தலைமுறையினர்தான் தீர்க்க வேண்டும் போல. நாங்கள் தலைவர்களாக மாற வேண்டிய நேரம் இது" என்றார்
இதுகுறித்து பேசிய, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் "எனது தலைமுறையினரின் பொறுப்புகளை உணர வைத்துவிட்டீர்கள். உலகைப் பாதுகாப்பதில் எங்கள் தலைமுறை தோல்வியடைந்துள்ளது. ஆனால் இளைஞர்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தால் நல்லதொரு மாற்றம் ஏற்படவுள்ளது" என்றார்.
இதையும் படிக்கலாமே:16 வயது சிறுமிக்கு சர்வதேச பொது மன்னிப்பு சபையின் உயரிய விருது!